செய்திகள்

திட்டமிட்டு ஆடியதால் வெற்றி பெற்றோம்: சேப்பாக் வீரர் தலைவன் சற்குணம் பேட்டி

திட்டமிட்டு ஆடியதால் வெற்றி பெற்றோம் என தமிழ்நாடு பிரீமியர் 'லீக்'கில் கோவைக்கு எதிராக வெற்றி பெற்றதை அடுத்து சேப்பாக் வீரர் தலைவன் சற்குணம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தியது.

‘டாஸ்’ வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. பின்னர் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரை சதம் அடித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த தலைவன் சற்குணம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திட்டமிட்டு விளையாடியதால் இந்த வெற்றியை பெற்றோம். நான் இயல்பாகவே விளையாடினேன். பீல்டிங் செய்த உடனே பேட்டிங் செய்தது கடினமாக இல்லை. எங்கள் அணியில் சிறந்த அதிரடி வீரர்கள் உள்ளனர். இதனால் எல்லோராலும் அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்க முடியும்.

கோவை அணி கூடுதலாக 10 முதல் 15 ரன்கள் எடுத்து இருந்தால் ஆட்டம் எங்களுக்கு சவாலாக இருந்து இருக்கும். தமிழக அணிக்கு தேர்வு செய்யாதது குறித்து நான் உண்மையிலேயே கவலைப்பட்டது இல்லை. நான் எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்சை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லையில் நடக்கிறது.

கோவை கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. அந்த அணி 3-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை நாளை (திங்கள்) சந்திக்கிறது.