தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்புகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இந்த வருடம் முதன் முதலாக ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியது.
ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி எந்த பகுதியில் இருந்தும் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக பதிவு செய்யலாம். இந்த விவரங்களையும் இணையதளத்தில் பார்க்கலாம். இதற்கு 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.