செய்திகள்

என்ஜினியரிங் கலந்தாய்வு நிறைவடைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 89,101 இடங்கள் காலி

அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற பி.இ. பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று நிறைவடைந்த நிலையில், 86,355 இடங்கள் நிரம்பியுள்ளன. 89101 இடங்கள் காலியாக உள்ளன.

மாலை மலர்

சென்னை: 

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்திற்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 583. அவற்றில் அங்கீகரிக்கப்பட்ட சீட்களின் எண்ணிக்கை 2,69,969 ஆகும். அவற்றில் கவுன்சிலிங்காக 1,73,643 இடங்கள் உள்ளன. அதில் தொழிற்கல்விக்கு 6,224 இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவு சீட்களின் எண்ணிக்கை 1,67,419. 

இதில், கடந்த மாதம் 23-ந்தேதி பொதுப்பிரிவு தொடங்கி நடைபெற்றது. கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள 1,35,552 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கலந்தாய்வு இன்று (வெள்ளி) நிறைவடைந்த நிலையில் மொத்தமாக இருந்த இடங்களில் 86,355 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைகழக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டவர்களில் 48,583 பேர் பங்கேற்கவில்லை. எனவே மீதம் 89,101 காலியிடங்கள் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள காலி இடங்களில் 50 சதவிகிதம் கூட நிரப்பப்படவில்லை. இதன்மூலம் என்ஜினியரிங் படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பு வெகுவாக குறைந்துள்ளது தெரிய வருகிறது.

மற்ற சிறப்பு மற்றும் தொழில் பிரிவுகளுக்கான கலந்தாய்வுகள் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.