செய்திகள்

பஸ் ஸ்டிரைக்கினால் ஆட்டோ கட்டணம் எகிறியது: மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகரிப்பு

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்சார ரெயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணிக்கின்றனர். #busstrike #TNTransportstrike #MTCstrike

மாலை மலர்

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளன. 

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக பணிக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். 

சென்னையில், 35 சதவீத அளவு பேருந்துகளே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த பேருந்துகளிலும் கடும் கூட்ட நெரிசல் இருந்ததால் பெண்கள் மற்றும் முதியோர் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் முண்டியடித்து நெரிசலில் சிக்கி அலுவலகம் வந்து சேர்ந்தனர். பேருந்துகள் இயக்கப்படாததால் மின்சார ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட அதிகரித்துள்ளது.

பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகள் வராத நிலையில், பலர் ஆட்டோக்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்தி ஆட்டோக்களில் பல மடங்கு கட்டணம் வசூலித்தனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்தனர். ஷேர் ஆட்டோக்களிலும் வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. 

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். busstrike #TNTransportstrike #MTCstrike #tamilnews