செய்திகள்

3-வது முறையாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்

தமிழக அரசு, உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாக விருது பெற்றுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின் மூலமாக 8-வது இந்திய உடல் உறுப்பு தான தினம் டெல்லியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் பெற்றமைக்கான விருதினை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அனுபிரியா பட்டேல், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.

விழாவில் விஜயபாஸ்கர் பேசுகையில், “ இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பினால் நடத்தப்படும் இந்திய உடல் உறுப்பு தான நிகழ்வில் தமிழக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றமைக்கான விருதினை பெறுவதில் பெருமையடைகிறேன்.

அம்மாவின் தொலைநோக்கு திட்டங்களினாலும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்காக பெருந்தொகையை ஒதுக்கீடு செய்து மருத்துவத்தில் உயிர்ப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது.

புரட்சித் தலைவி அம்மாவை தலைவராகக் கொண்டு 2014-ல் உருவாக்கப்பட்ட டிரான்ஸ்டான் என்ற அமைப்பு. அமைப்பு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகவும் செம்மையாக செயல்படுவதின் அடையாளமாக இதுவரை தமிழகத்தில் 1056 கொடையாளர்களிடமிருந்து 5933 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூலம் உடலுறுப்பு தானத்தில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களை விஞ்சி நிற்கிறது” என்றார்.