அமைச்சர்கள் சிவி சண்முகம், கேபி அன்பழகன், பாண்டியராஜன் 
செய்திகள்

தமிழக அமைச்சர்கள் 3 பேர் வெளிநாடு பயணம்

தமிழக அமைச்சர்களான சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், பாண்டியராஜன் ஆகியோர் இன்று வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷியாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளனர்.

இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.

சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக தனிப்பட்ட பயணமாக சி.வி.சண்முகம் சென்றுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.