சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோனின் 260-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை யொட்டி சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., நா.சே. ராமச்சந்திரன், வீரபாண்டியன், திரவியம், சிவராஜ்குமார், ரூபி மனோகரன் மற்றும் அகமது அலி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க. புரட்சித் தலைவி அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் மற்றும் மகிழன்பன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கே.ஜோதி லிங்கம் யாதவ், கீர்த்தி புரமோட்டர்ஸ் கமல்ஹாசன் யாதவ் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அன்னதானமும் வழங்கினார்கள்.
கோகுல மக்கள் கட்சி நிறுவன தலைவர் எம்.வி. சேகர் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வீரன் அழகு முத்துகோன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் எல்.வி. ஆதவன், சி.பி. பாஸ்கரன், சுரேந்திரபாபு, அரிகிருஷ்ணன், குண சேகரன், ராஜேந்திரன், ஜி.ராஜேந்திரன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
எம்.வி. சேகர் கூறுகையில், சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துகோனின் குரு பூஜையை தமிழகம் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் இளைஞர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பாடப்புத்தகங்களில் அவரது வரலாற்றை இடம் பெற செய்ய வேண்டும் அவரை சுட்டுக் கொன்ற இடத்தில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்றார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்தார்.