சென்னை:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு புதிய முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அப்போது ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு தனி அணியும் செயல்பட்டு வந்தது. சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமியை எம்.எல்.ஏ.க்கள் புதிய முதல்- அமைச்சராக தேர்வு செய்தார்கள். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் கை கோர்த்தார்.
இருவரும் இணைந்து அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினர். அதில் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி இனி அ.தி.மு.க.வில் கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நேரத்தில் சசிகலாவால் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் தனது ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இதனால் அணிகள் இணைப்புக்கு பின்னரும் அ.தி.மு.க.வில் பிளவு நீடிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி அணியினரும், தினகரன் தரப்பினரும் ஆங்காங்கே மோதிக்கொண்ட சம்பவங்களும் நடந்தன. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தினகரன் அணியினர் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மாநில உளவு பிரிவு அதிகாரிகள் மத்திய அரசுக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்டு முதல்-அமைச்சர் பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டால் மத்திய போலீஸ் படையினர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் பாதுகாப்புக்காக செல்வார்கள்.