சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட்டது.
“சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் நியமித்தது அதிகார வரம்பு மீறல். குறிப்பிட்ட துறை சார்ந்த விசாரணை அதிகாரியை நியமிப்பது அரசின் உரிமை. தமிழக அரசின் உரிமையை பறிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட வழக்குகளை மேற்பார்வையிடுவதற்கு வேண்டுமானால் நீதிமன்றம் அதிகாரியை நியமிக்கலாம்.
வழக்கு தொடர்பான சரியான ஆய்வுகள் இல்லாமல் பொன் மாணிக்கவேல் செயல்படுபவராக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம். குஜராத்தைச் சேர்ந்த சாராபாய் என்ற 95 வயது பெண் நடத்தும் அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை, கடத்தல் சிலைகள் எனக் கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்பதால் பொன் மாணிக்கவேலின் தவறுகளை நீதிமன்றம் கண்டுகொள்வதில்லை.
அதன்பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “இந்த வழக்கைப் பொருத்தவரை அதிகாரி பொன் மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா என்பதை நாங்கள் பார்க்கப் போவதில்லை. அவரது நியமனம் சரியா, தவறா? என்பதை மட்டுமே பார்க்கப்போகிறோம்” என்று தெரிவித்தனர். #PonManickavel #SupremeCourt