தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், சென்னையில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை ராமேசுவரம் வந்தார்.
காலை 4.25 மணிக்கு ரெயில் நிலையம் வந்த அவரை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி வரவேற்றார்.
அதன் பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் குடும்பத்தினருடன், சங்கு மால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கிருந்து சிறிது நேரத்தில் அவர் கோவிலுக்கு புறப்பட்டார்.
காலை 5.20 மணிக்கு கோவிலுக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில் வாகனன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
தொடர்ந்து கோவிலுக்குச் சென்ற கவர்னர் மற்றும் அவரது குடும்பத்தினர், ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
அதன் பிறகு பேட்டரி கார் மூலம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்றனர். அங்கு கவர்னரும், அவரது குடும்பத்தினரும் நீராடினர். கோவில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் அவர்கள் நீராடினர்.
ராமேசுவரம் கோவிலில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலின் பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை கவர்னரும், அவரது குடும்பத்தினரும் பார்த்து ரசித்தனர். அம்மன் சன்னதி மூல மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் புத்தகத்திலும் கவர்னர் கையெழுத்திட்டார்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு விருந்தினர் மாளிகை திரும்பிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் அங்கு காலை உணவை முடித்தார்.
தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்றார். அங்கு கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரக் காயரை சந்தித்தார்.
தனுஷ்கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை அமைக்கப்பட்டுள்ள சாலையையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார். மதிய உணவுக்கு பிறகு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சென்று ஆய்வு செய்கிறார்.