செய்திகள்

இந்த ஆண்டில் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளது: தமிழக அரசு தகவல்

பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளன என்று தமிழக அரசு கூறியுள்ளது.

மாலை மலர்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், சாலையில் பொறுப்புடன் நடந்துகொள்ள ஏதுவாகவும் வாகனம் இயக்கும்போது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குபவர் கள் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

அதிவேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், வாகனம் இயக்கும்போது செல்போன் உபயோகப்படுத்துதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன. கடந்த அக்டோபர் மாதம் வரை 86,873 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 14,077 நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகளும், பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும் என 4,730 பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதனை குறைக்க அனைத்து இருசக்கர வாகன விற்பனை உரிமையாளர்களிடம் தங்களது விற்பனை மையங்களில் ‘சாலை பாதுகாப்பு மையம்’ ஒன்றை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அதன்படி இந்த மாதம் நவம்பரில் மட்டும் இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் தங்களது விற்பனை மையங்களில் 485 சாலை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தி உள்ளனர். அந்த மையங்களுக்கு ஒலி, ஒளி நாடாக்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவை அனுப்பப்பட்டு வருகிறது.

புதிதாக இருசக்கர வாகனங்கள் வாங்குபவர்களுக்கு வாகனத்தை ஒப்படைக்கும் முன்பு சாலை பாதுகாப்பு குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் பலனாக 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நடைபெற்ற விபத்துகளை ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் 5,145 சாலை விபத்துகளும், 525 உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.