செய்திகள்

விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு பறக்கும் சாலை

விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு புதிதாக பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 30 நிமிடத்தில் செங்கல்பட்டை சென்றடையலாம்.

மாலை மலர்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் ஜி.எஸ்.டி. சாலையில் (என்.எச்.45) தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ், கார், லாரி, வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

இதனால் இந்த சாலையில் தினமும் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. 36 கி.மீட்டர் தூரம் உள்ள செங்கல்பட்டுக்கு வாகனத்தில் சென்று அடைவதற்கு 1 மணி 10 நிமிடங்கள் ஆகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் இதனை ஆய்வு செய்து போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும், புதிய திட்டம் ஒன்றை தயாரித்து உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 36 கி.மீட்டர் தூரத்துக்கு புதிதாக பறக்கும் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து உள்ளது. இந்த பறக்கும் சாலையால் பயண நேரம் வெகுவாக குறையும். 30 நிமிடத்தில் செங்கல்பட்டை சென்றடையலாம்.

இந்த பறக்கும் சாலை ரூ.3 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. 4 வழிப்பாதையில் வாகனங்கள் செல்லலாம். முதல் கட்டமாக பல்லாவரம்- ஐ.டி.பார்க் 21.7 கி.மீட்டர் தூரம் பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது. 2-வது கட்டமாக ஐ.டி.பார்க் -செங்கல்பட்டு 13.6 கி.மீட்டர் தூரம் பறக்கும் சாலை உருவாக்கப்படுகிறது. இந்த பாலம் 18 மீட்டர் அகலம் கொண்டதாக கட்டப்பட உள்ளது.

இந்த பறக்கும் சாலை அமைக்கும் பணி மத்திய- மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்றதும் விரைவில் தொடங்கும். எனவே வாகனங்களில் விரைவாக, எளிதாக செங்கல்பட்டு சென்று வரலாம். இந்த பறக்கும் சாலையில் 65 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியும்.

பல்லாவரம், குரோம் பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங் கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் வழியாக செங்கல்பட்டுக்கு இந்த பறக்கும்சாலை செல்லும்.

இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் நீண்ட காலமாக ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.