செய்திகள்

ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் சென்னையில் பறிமுதல் - தேர்தல் ஆணையம் விளக்கம்

ரபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. #Rafale #SatyabrataSahoo

சென்னை:

பாஜக ஆட்சியில் ராணுவத்துக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை இந்து பத்திரிகை தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இதற்கிடையே, இந்து பத்திரிகையில் வெளியான தகவல்களை தொகுத்து எஸ்.விஜயன் என்பவர் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுவதாகவும், அதில் இந்து என்.ராம் பங்கேற்கிறார் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இன்று பிற்பகல் பாரதி பதிப்பகம் சென்ற போலீசார் அங்கிருந்த ரபேல் ஊழல் தொடர்பான புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, பாரதி பதிப்பக உரிமையாளர் பா.கு.ராஜன் கூறுகையில், பொது தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை நாங்கள் பதிப்பித்து உள்ளோம். தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஆகியவை திடீரென இந்த புத்தக்கத்தை எதிர்ப்பதற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரபேல் ஊழல் குறித்த புத்தகங்களை பறிமுதல் செய்ய இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை அளிக்க கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். #Rafale #SatyabrataSahoo

SCROLL FOR NEXT