காமராஜ் ‘தி கிங்மேக்கர்’, ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக இந்த நிறுவனம் தயாரிக்கிறது.
எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவரது வாழ்வு மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.
ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆரின் வரலாற்றுத் திரைப்படம் அவரது நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நவம்பர் 8-ந்தேதி (புதன் கிழமை) படப்பிடிப்பை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.