செய்திகள்

காவிரி விவகாரம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அவசர கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று மத்திய அரசு கூட்டம் நடந்துள்ள நிலையில், நாளை மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசர கூட்டம் நடக்க உள்ளது. #Cauvery

சென்னை:

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவது மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில தலைமைச் செயலர்கள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லி நீர்வளத்துறை அமைச்சகத்தில் இன்று நடந்தது.

கூட்டத்துக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபயேந்திர பிரசாத் சிங் தலைமை தாங்கினார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்து கூட்டத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். கர்நாடகா மாநில அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது பற்றி முடிவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.

தமிழக அதிகாரிகள், காவிரி மேலாண்மை வாரியத்தை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். 

மேலும் தமிழ்நாட்டுக்கு இந்த மாதம் காவிரியில் திறந்து விட வேண்டிய தண்ணீரை இடைக்கால நடவடிக்கை என்ற அடிப்படையிலாவது திறந்துவிட வேண்டும் என்றும் தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக 4 மாநிலங்களும் தங்கள் செயல் திட்டங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு நாளையே தனது செயல்திட்டத்தை தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இல்லை என்று கர்நாடகம் கூறியிருப்பதால், வேறு தீர்வையே கர்நாடக அரசு முன்வைக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மதியம் அவசர கூட்டம் நடக்க உள்ளது. இதில், தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் டெல்லியில் இன்று நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். #CauveryManagementBoard

SCROLL FOR NEXT