செய்திகள்

பாசனத்திற்காக சின்னாறு நீர்த்தேக்கத்தில் 7-ந்தேதி தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

தருமபுரி மாவட்டத்தில் பாசனத்திற்காக சின்னாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 7-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தருமபுரி மாவட்டம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்காக 7.12.2017 முதல் வினாடிக்கு 25 கன அடி வீதம் புதிய பாசன பரப்பிற்கு முறை வைத்தும், 19.1.2018 முதல் பழைய ஆயக்கட்டு பாசன பரப்பிற்கு ஒரு முறையும், மொத்தம் 444.14 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.