மு.க. ஸ்டாலின், மாரியப்பன் 
செய்திகள்

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு: மு.க. ஸ்டாலின்

டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மாலை மலர்

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று உயரம் தாண்டுதல் (டி42) போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்ற இருவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அத்துடன் 2 கோடி ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.

சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!’’ எனத் தெரிவித்துள்ளார்.