செய்திகள்

பிப்ரவரி 7ந்தேதிக்குள் திருவாரூரில் இடைத்தேர்தல்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மதுரை ஐகோர்ட்டில் தகவல்

திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #ThiruvarurByElection #HCMaduraiBench

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி, திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் ஆகிய இருவரும் மரணம் அடைந்ததால் அந்த 2 சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

தேர்தல் விதிகளின்படி சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்துக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நேரத்தில் பருவமழை காரணமாக இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணம் இல்லை.

ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனதற்கு எதிராக தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினால் தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் இடைத்தேர்தலை நடத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

எனவே தேர்தல் விதிகளின்படி உடனடியாக திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல்களை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு அறிக்கை தாக்கல் செய்தார்.

திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT