செய்திகள்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க கடும் எதிர்ப்பு: பணிமனைகளில் ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். #TNTransportstrike #Busstrike #MTCstrike

மாலை மலர்

சென்னை:

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்காத தி.மு.க. உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி வருகின்றனர். ஏராளமான பேருந்துகள் ஓட்டுவதற்கு டிரைவர் இல்லாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தினக்கூலி அடிப்படையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு பேருந்துகளை இயக்க தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பணிமனைகளுக்கும் தற்காலிக ஊழியர்களை நியமிக்கும் நடைமுறை தொடங்கியது.

இதற்கிடையே வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகளை இயக்கும் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பும் தெரிவிப்பதுடன், தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்குவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 

மதுரை தலைமை பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்  நடத்தினர். அவர்களை கலைந்துசெல்லும்படி போலீசார் எச்சரித்தனர். அப்போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்- தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் அனைத்து பணிமனைகளிலும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக பணிமனைகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. 

இவ்வாறு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், 80 சதவீத பேருந்துகள் இயங்குவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #TNTransportstrike #Busstrike #MTCstrike #tamilnews