செய்திகள்

சென்னையில் வெள்ளத் தடுப்புக்கு ரூ.3,300 கோடி

மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் ரூ.3,300 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. #TNBudget2018 #OPS

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

மழை வெள்ளத்தால் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதிகளுக்கான விரிவான வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டம், முறையே 2,055.67 கோடி ரூபாய் மற்றும் 1,243.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.

அதே போல், மத்திய அரசின் உதவியைப் பெறும் வகையில், ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் பதப்படுத்தும் பூங்காவினை கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையினை இந்த அரசு தயாரித்து வருகிறது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, நிதியுதவியும் வழங்கும் என நான் நம்புகிறேன்.

ரூ.920.63 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டத்தினை உலக வங்கி நிதியுதவியுடன், 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது.

2018-2019-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாநிலத்தில் உள்ள 265 வட்டாரங்களில் ‘தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமும்’, ‘தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமும்‘ செயல்படுத்தப்பட்டு வருவதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்த வழிவகை ஏற்பட்டுள்ளது.

2018-2010-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் மொத்தமாக ரூ.519.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS #tamilnews