செய்திகள்

தமிழக பட்ஜெட் தாக்கல் - ஜெயலலிதா நினைவிடம் அமைக்க ரூ.20 கோடி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் ‘வேதா நிலையம்’ இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார். #TNBudget #OPS #Jayalalithaa

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)யை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. அணிகள் பிளவுபட்டு மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு தற்போது 2-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 8-வது பட்ஜெட் இதுவாகும்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 15 ஆயிரத்து 930 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அந்த பற்றாக்குறை ரூ. 17 ஆயிரத்து 490 கோடியாக அதிகரித்துள்ளது.

பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. என்றாலும் வரி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

பட்ஜெட்டில் புதிய திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஏற்கனவே தொடரும் புகழ் பெற்ற திட்டங்களுக்கு கணிசமான அளவுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

சம்பளம் செலவினங்களுக்காக பட்ஜெட்டில் ரூ.52,171 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க ரூ.25,362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மொத்த வரி வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாக இருக்கும். செலவு தொகை ரூ. 1.91 லட்சம் கோடியாக இருக்கும்.

மேலும் பட்ஜெட்டில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நிலுவையிலுள்ள பல்வேறு வழக்குகளாலும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறைப் பணிகளை தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையம் செய்து கொண்டிருப்பதாலும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்த பின்னரே, மாநிலத் தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட இயலும். எனினும், வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தும் செலவினங்களுக்காக 172.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2018-2019- ஆம் ஆண்டிற்கு மாநில நிதிக் குழுவின் பரிந்துரைப்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,980.33 கோடி ரூபாயும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4,834.75 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படும். அதே போல் மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,975.07 கோடி ரூபாயும், நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,877.10 கோடி ரூபாயும் பகிர்ந்தளிக்கப்படும்.

கவர்னர் உரையில் ஏற்கனவே அறிவித்தபடி, மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் விதமாக மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் 50.80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

இத்துடன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் ‘வேதா நிலையம்.’ இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த நூற்றாண்டு விழாக்களின் நிறைவாக, சென்னையில் மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #TNBudget #TNBudget2018 #TNbudgetsession #OPS #tamilnews