சென்னை:
சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி தொடங்கியது.
அன்று முதல் சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கூட்டம் நடந்து வந்தது. இதில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இன்று சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதி பிரச்சனைகளை சுருக்கமாக பேச சபாநாயகர் தனபால் அனுமதி அளித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- கொளத்தூர் தொகுதியில் விரிவாக்கப்பட்ட இடங்களில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தடையில்லா மின்சாரம் கேட்டு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளேன். நேர்மைநகர் உள்பட பல இடங்களில் துணை மின்நிலையம் பல ஆண்டுகள் ஆகியும் அமைக்கப்படாமல் உள்ளது.
புதைவட மின்கம்பிகளை புதைப்பதில் போதிய அளவு பில்லர் பாக்ஸ் இல்லாததால் பணிகள் தடைபட்டு இருப்பதாக தகவல் வருகிறது.
அமைச்சர் தங்கமணி:- கணேஷ்நகரில் 1,682 சதுர மீட்டர் அளவுக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு ஒரு மாதத்தில் துணை மின்நிலையம் அமைக்க பணிகள் தொடங்கும். கொளத்தூர் தொகுதியில் ரூ.242 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. விரிவாக்கப்பட்ட பகுதியிலும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
சேகர்பாபு (தி.மு.க.):- யானைக்கவுனி பாலம் விரிவாக்க திட்டத்தை ரெயில்வே துறை செயல்படுத்தவில்லை. மாநகராட்சி ஆணையர் பாலம் செலவு முழுவதையும் ரெயில்வே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரெயில்வே போக மீதி தொகையை மாநகராட்சி செலுத்துவதுதான் வழக்கம். பாதிப்பாதி செலவை செய்வதுதான் நடைமுறை. ஆனால் இதில் முடிவு காணப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் மூச்சுவிட முடியாத அளவுக்கு உள்ளது.
மோகன் (தி.மு.க.):- அண்ணாநகரில் கலைக் கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி கொண்டு வர வேண்டும். சொந்தப் பணம் ரூ.1 கோடி தரத் தயாராக இருக்கிறேன்.
கு.க.செல்வம் (தி.மு.க.):- மாம்பலம் கால்வாய் துர்நாற்றம் வீசுகிறது.
எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.):- பம்மல், நாகர்கேணி, பொழிச்சலூர், திருநீர்மலை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்குள்ள சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியே விடுவதால் கால்வாய் வழியாக அடையாறு, மணப்பாக்கம் தடுப்பணையில் தேங்கி நின்று வழிந்தோடுகிறது. இதனால் மவுலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது.
செங்குட்டுவன் (தி.மு. க.):- கிருஷ்ணகிரியில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
இ.கருணாநிதி (தி.மு.க.):- பல்லாவரம் தொகுதி குரோம்பேட்டை- ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை (எல்.சி.27)யில் 2010-ம் ஆண்டு ரெயில்வே பணிகள் முடிக்கப்பட்டு இதுவரை மற்ற பணிகள் தொடங்கப்படவில்லை.
பம்மல், அனகாபுத்தூர் நான்கு வழிச்சாலையை அகலப்படுத்தக்கோரி ஏற்கனவே வலியுறுத்தினேன். இன்னும் அந்த பணிகள் நடைபெறவில்லை.
கே.என்.நேரு (தி.மு.க.):- திருச்சி உய்யக்கொண்டான் ஆறு, பெட்டவாய்த்தலையில் தொடங்கி 44 மைல் நீளத்துக்கு ஓடுகிறது. கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு உள்பட பல அலுவலகங்கள் அதன் கரையில் உள்ளன. ஆனால் 15 கி.மீ. நீளத்துக்கு ஆகாயத்தாமரை படர்ந்து கழிவு நீரும் கலக்கிறது. இதை அகற்ற வேண்டும்.
மாதவரம் சுதர்சனம் (தி.மு.க.):- மாதவரம் பால் பண்ணையில் உள்ள 38 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை ஏப்ரலில் இருந்து தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தி 60 படுக்கை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இங்கு தினமும் 1000 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். மாதத்துக்கு 60 பேர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் இது தரம் உயர்த்தப்படாமல் பழைய நிலையிலேயே செயல்படுகிறது. தேவையான உபகரணங்கள் இல்லை, சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், கூடுதல் மருந்தாளுனர்கள் நியமிக்கப்படவில்லை.
அபுபக்கர் (இ.யூ.மு.லீக்):- சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை திட்டங்களுக்கு பயன்படுத்தும்போது காலதாமதம் ஆகிறது. மற்ற மாநிலங்களில் உள்ளது போல் இதை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்க வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் பேசினார்கள்.