செய்திகள்

தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது: ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும்

தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் வருகிற 14-ந்தேதி கூட்டப்பட உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழக சட்டசபையில் 2017-2018-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மார்ச் 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

இதன் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் 24.3.17 அன்று நிறைவடைந்தது.

அதன் பிறகு மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

இடைத்தேர்தல் முடிந்த பிறகு சட்டசபையை கூட்டி மானியக் கோரிக்கைகளுக்கான ஒப்புதலை பெறலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தை வருமான வரித்துறை கண்டு பிடித்ததால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்தது.

அதன் பிறகு சட்டசபை கூட்டப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபையை உடனே கூட்டுமாறு சபாநாயகரிடம் கடந்த 19.4.2017 அன்று மனு கொடுத்தார். முதல்- அமைச்சரிடமும் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படாமல் சட்டசபை கடந்த 2 மாதமாக கூட்டப்படாமல் இருந்தது.


இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையின் கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி கூட்டப்பட உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வு குழு கூட்டம் வருகிற 7-ந்தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது.

சட்டசபையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட உள்ளதால் குறைந்த பட்சம் 25 முதல் 30 நாட்கள் வரை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அலுவல் ஆய்வு குழுவில் முடிவு எடுக்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட வேண்டிய இட ஒதுக்கீடு மசோதா, ஜி.எஸ்.டி. வரி மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

தற்போதைய அரசியல் பரபரப்பில் டி.டி.வி. தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்வார்கள்? என்பது பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.