செய்திகள்

கடும் அமளிக்கிடையே சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல்

தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க.வினரின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.

மாலை மலர்

சட்டசபையில் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வகை செய்யும் ஜி.எஸ்.டி. மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இந்த மசோதாவை ஆதரித்து மாநில அரசுகளும் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன. தமிழக சட்டசபையில் இன்று தி.மு.க.வினரின் கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. மசோதாவை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தாக்கல் செய்தார்.

* தற்போது தமிழக அரசு மதிப்பு கூட்டு வரி என்ற முறையில் சில்லரை விற்பனைகள் மீதான வரியும், நுழைவு வரி என்ற முறையில் மாநிலத்தில் சரக்குகள் மற்றும் இயக்கூர்திகள் நுழைவின் மீதான வரியும் ஆடம்பர வரி, கேளிக்கை வரி, கொள்முதல் வரி மற்றும் விளம்பர வரி விதிக்கிறது.

* இதுபோன்று மத்திய அரசு ஆயத்தீர்வை என்ற முறையில் சில சரக்குகள் உற்பத்தி மீது வரியும் சேவை வரிகள் என்ற முறையில் சில சேவைகள் வழங்குவதன் மீதான வரியும், மத்திய விற்பனை வரி என்ற முறையில் சரக்குகள் இடையே மாநில விற்பனையின் மீது வரியும் விதிக்கிறது. இதனால் ஒரே பொருளின் மீது பலமடங்கு வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மத்திய அரசு விதிக்கும் வரிகளானது மாநில அரசால் விதிக்கப்படும் வரிகளுக்கு எதிராக சரிஈடு கிடைக்கப்பெறாததால் வரிகள் மிகுதியாகின்றன. மாநில அரசுகளால் விதிக்கப்படும் சில வரிகளுக்கு அதனால் விதிக்கப்படும் சில வரிகளுக்கு எதிரான சரிஈடு அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி சட்ட முன்வடிவு கீழ்க்கண்ட நடவடிக்கைகளுக்கு வகை செய்கிறது.


* மதுபானங்களின் வழங்குதலை தவிர்த்து மாநிலத்துக்குள் சரக்குகள் மற்றும் சேவைகளுக்கான வரி 20 சதவீதத்துக்கு மேற்படாமல் ஒரே மாதிரியான வரி விதித்தல்.

* கச்சா பெட்ரோலியம், அதிவேக டீசல், மோட்டார் ஸ்பிரிட், இயற்கை எரிவாயு, வானுர்தி எந்திர எரிபொருள் ஆகிய சரக்குகளின் விற்பனை வரி மற்றும் சேவை வரி விதிப்பதற்கு மாநில அரசு எந்த தேதி பரிந்துரை செய்கிறதோ அதுவரை 2006-ம் ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி தொடர்ந்து வரி விதித்தல்.

* சட்டமன்றத்தின் அறிக்கையின் வாயிலாக அல்லது தனி ஆணையின் செயலாக வரிவிலக்கு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தல்.

* வணிகத்தின்போது, அல்லது வணிக நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்ட சரக்குகள் அல்லது சேவை வரிகளை பரவலாக கிடைக்கச் செய்தல்.

* சரக்கு அல்லது சேவைகளை வழங்குவோர்களுக்கு அவர்களுடைய வலைதள முகவரி மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு நிகர மதிப்பில் ஒரு சதவீதத்துக்கு மேற்படாத வகையில் வரி வசூலிக்க உத்தரவிடுதல்.

* பதிவு பெற்ற ஒருவரால் செலுத்த வேண்டிய வரி களை சுய கணிப்பு செய்வதற்கும், தற்காலிக மற்றும் நியாயமான முறையில் ஆய்வு செய்து வரி விதிப்பதற்கு வகை செய்தல்.

* இந்த சட்டவரை முறைகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்க வகை செய்தல்.

* அலுவலர்களுக்கு ஆய்வு செய்தல், சோதனை செய்தல், கைப்பற்றுதல் மற்றும் கைது செய்வதற்கு அதிகாரம் வழங்குதல்.

* சரக்கு மற்றும் சேவை வரி துறைக்கு தற்போது உள்ள வரி செலுத்துவோரை சீராக மாற்றம் செய்வதற்கு விரிவான மாறுதல் கால அவகாசம் வழங்குதல்.

* மாநில வரி அலுவலர்களுக்கு ஆணைகளோ, அறிவுறுத்தல்களோ அல்லது உத்தரவு பிறப்பிப்பதற்கு ஆணையருக்கு உத்தரவு வழங்க அதிகாரம் வழங்குதல் உள்பட பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.