செய்திகள்

காஞ்சீபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ந் தேதியை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு த.மு.மு.க.வினர் காஞ்சீபுரத்தில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார் நினைவுதூண் அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் ரவூப் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மதவாத அரசியலை புறக்கணிப்போம் என கோ‌ஷமிட்டனர். மேலும் பாபர் மசூதி இடத்தினை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது சம்பந்தமான வழக்கினை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் அப்துல்சமத், மாநிலச் செயலாளர் ஹாஜா கனி, மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் யாகூப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.