செய்திகள்

மேற்கு வங்காளம் இடைத்தேர்தல்: திரிணாமுல் கட்சி அபார வெற்றி

மேற்கு வங்காளம் மாநிலத்தின் உலுபேரியா மக்களவை தொகுதி மற்றும் நவ்பாரா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. #westbengal #uluberia #noapora #bypoll

மாலை மலர்

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் உலுபேரியா தொகுதியில் திரிணாமுல் கட்சியை சேர்ந்த சுல்தான் அகமது எம்.பி. மற்றும் நவ்பாரா தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மதுசூதன் கோஸ் ஆகியோர் காலமானதை தொடர்ந்தும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

உலுபேரியா பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 76.7 சதவீதமும், நவ்பாரா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் 75.3 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை நடைபெற்றது. இறுதி நிலவரம் வருமாறு:

உலுபேரியா மக்களவை தொகுதியில் ஆளும் கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சஜ்தா அகமது 7,67,556 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இது அவரை தொடர்ந்து வந்த பா.ஜ.க. வேட்பாளரை விட 4.7 லட்சம் வாக்குகள் அதிகம். பா.ஜ.க. வேட்பாளர் அனுபம் மாலிக் 2,93,046 வாக்குகளும், சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் சபிருதின் முல்லா 1.03,015 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மடாசர் உசேன் வர்சி 16,784 வாக்குகளும் பெற்றார்.

இதேபோல், நவ்பாரா சட்டசபை தொகுதியிலும் ஆளும் கட்சி வேட்பாளரே வெற்றி பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுனில் சிங் 1.01,729 வாக்குகள் பெற்றார். இது அவரை தொடர்ந்து வந்த பா.ஜ.க. வேட்பாளரை விட 63,000 வாக்குகள் அதிகம். பா.ஜ.க. வேட்பாளர் சந்தீப் பானர்ஜி 38,711 வாக்குகளும், சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் கர்கி சட்டர்ஜி 35,497 வாக்குகளும் பெற்றார்.

மேற்கு வங்காளத்தின் இரு தொகுதிகள் மட்டுமின்றி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைத்தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது அந்த கட்சியினரியடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #westbengal #uluberia #noapora  #bypoll #tamilnews