சென்னை:
முன்னாள் அமைச்சரும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஆங்காங்கு உள்ள குட்டைகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள், ஆறுகள் ஆகியவற்றை மேம்படுத்தவும், பாதுகாத்திடவும் தி.மு.க.வினர் தூர்வாரும் பணியில் இப்போதே களம் காண்பீர் என தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கழகத்தினருக்கு கட்டளை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சோமசுந்தரம் இதை குறை கூறி மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல் ஆட்சி அதிகாரத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு இரு அணிகளாக பிரிந்து குழாயடி சண்டை போட்டுக்கொண்டு இருப்பவர்கள் மக்களின் நலன் காக்க பாடுபடும் எங்கள் தளபதி மு.க.ஸ்டாலினை விமர்சிக்க எந்த தகுதியும் கிடையாது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள அவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சித்தால் வாரியத் தலைவர் பதவி கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தான் இந்த பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆப்பூரில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் நிறைவாக உறுதி முழக்கப் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றினார்.
இம்மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு தனியாருக்கு சொந்தமான 350 ஏக்கர் பரப்பிலான இடத்தில் உரிமையாளரிடம் முறையான அனுமதியை பெற்று திடலை சமன்படுத்தினோம்.
அப்போது அ.தி.மு.க.வினர், தனியாருக்கு சொந்தமான இடத்தின் நடுவே உள்ள ஓர் குளத்தை தூர்த்துவிட்டதாக பொய்யான புகார் தந்து மூன்று பேர் மீது பொய் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் உண்மைநிலை என்னவென்றால் அந்த 350 ஏக்கர் இடத்தின் நடுவே ஓர் சிறிய குட்டை மண் கொட்டி தூர்ந்து போன நிலையில் சமமாக இருந்ததால் குட்டை என்று எங்களுக்கு முதலில் தெரியவில்லை. பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் வரைபடத்தை காட்டிய போது அங்கு சிறிய குட்டை இருப்பதாக தெரிய வந்தது.
வருவாய் துறை அதிகாரிகள் குட்டை இருப்பதாக சுட்டிக் காட்டிய அந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு பலகைகள் அமைத்திடுவோம் என்று உறுதி தந்ததன் அடிப்படையில் காவல் துறையினரும், வருவாய் துறையினரும் பார்வையிட்டு ஆப்பூரில் கூட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதியை வழங்கினார்கள்.
ஆப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மேடையை விட்டு இறங்கிய போது முதல் வேலையாக தூர்ந்து போயுள்ள குட்டையை தூர்வாரி சுற்றிலும் கரை அமைத்து சிறு குளமாக அமைத்திட வேண்டும் என்று கட்டளையிட்ட தலைவர் தான் மு.க.ஸ்டாலின் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.
அவரது கட்டளையை ஏற்று நாங்கள் தூர்ந்து போயிருந்த அந்த குட்டையை தூர்வாரி சிறு குளமாக மாற்றி தந்தது காவல் துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் நன்றாக தெரியும்.
எந்தவித தவறும் சுட்டிக் காட்ட முடியாத நேர்மையான தலைவர் கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர் அப்பழுக்கற்ற தலைவர் என்று தமிழக மக்கள் போற்றிப் பாராட்டும் எங்கள் தளபதியை பற்றி விமர்சித்து பேசுவதற்கு அ.தி.மு.க.வில் யாருக்காவது தகுதி இருக்கிறதா? என்றால் இல்லை.
ஏரிகள் நிறைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை எல்லாம் மடக்கி வீட்டு மனைகளாக விற்று கோடி கோடியாக கொள்ளையடித்த ஊழல் நிறைந்த கட்சி அ.தி.மு.க என்று மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.