புதுடெல்லி:
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் குட்கா, பான்மசாலா விவகாரத்தை சுட்டிக்காட்டி, டி.கே.ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக்கூடாது, புதிய டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
புதிய டி.ஜி.பி. நியமிக்கப்பட்டால் ஜாங்கிட், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்திரன், ஜார்ஜ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவருக்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இவர்களின் பணி தொடர்பான பட்டியலையே மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுபவர் குறைந்தது 2 ஆண்டுகள் அந்த பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இது தவிர டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவரின் (யு.பி.எஸ்.சி. சேர்மன்) ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது.
அதன் அடிப்படையில் புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவரின் ஆலோசனையைப் பெறுவதற்காக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று டெல்லி வந்தார்.
பிற்பகல் 3 மணிக்கு அவர் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தேர்வாணைய தலைவர் டேவிட் ஆர்.ஷைம்லீயை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
எனவே, புதிய டி.ஜி.பி. பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.