செவ்வாய்பேட்டை:
திருவேற்காடு அன்பு நகரை சேர்ந்தவர் செந்தில். லாரியில் சுமை ஏற்றும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காமாட்சி. 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் செந்திலின் தாய் சரஸ்வதியும் வசித்து வருகிறார்.
செந்திலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த செந்தில் மனைவி காமாட்சியிடம் தகராறு செய்தார். இதனால் காமாட்சி கோபித்து கொண்டு 3 குழந்தைகளுடன் அனகாபுத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதன்பின் செந்தில் தாய் சரஸ்வதியிடம் தகராறு செய்தார். அதனை அவர் கண்டித்து உள்ளார். அதன் பிறகு நள்ளிரவில் போதையில் செந்தில் தூங்கி விட்டார். மகன் தினமும் குடித்து விட்டு தகராறு செய்வதால் சரஸ்வதி ஆத்திரத்தில் இருந்தார்.
இன்று அதிகாலை திடீரென்று சரஸ்வதி கல்லை எடுத்து தூங்கி கொண்டிருந்த மகன் தலையில் போட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சரஸ்வதி திருவேற்காடு போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.