செய்திகள்

திருத்தணி ஆஸ்பத்திரியில் பச்சிளம் பெண் குழந்தையை மரத்தடியில் வீசிய தாய்

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பச்சிளம் பெண் குழந்தையை மரத்தடியில் வீசிய தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பள்ளிப்பட்டு:

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இன்று காலை, அங்குள்ள மரத்தடியில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்தது.

சிறிது நேரத்தில் அந்த குழந்தை அலறியது. அருகில் பெற்றோர் யாரும் இல்லை. சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. பெற்றோர் யார் என்று தெரியவில்லை. பெண் குழந்தை பிறந்ததால் ஆஸ்பத்திரியில் விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றவர்கள் விபரம் சரியாக உள்ளது. எனவே வெளியில் இருந்து வந்த நபர்கள் குழந்தையை விட்டு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஆஸ்பத்திரியில் மொத்தம் 6 கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளன. குழந்தை வீசப்பட்ட இடம் அருகே கேமிரா இல்லை. இதனால் குழந்தையை விட்டு சென்றவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

மற்ற கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.