திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி. விசைத்தறி உரிமையாளர். இவரது மகன் சரத் பிரபு (22). இவர் டெல்லி யூ.சி. எம்.எஸ். மருத்துவ பல்கலைக் கழகத்தில் எம்.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
பல்கலைக் கழகம் அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி விடுதி கழிவறை வாசலில் மாணவர் சரத் பிரபு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை சக மாணவர்கள் மீட்டு பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரத் பிரபுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
மர்மமான முறையில் இறந்த மாணவர் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என சரத் பிரபு தந்தை செல்வமணியின் வக்கீல் கிருஷ்ணராஜ் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதன்படி பிரேத பரிசோதனை அறிக்கை வக்கீல் கிருஷ்ணராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சரத் பிரபு தந்தை செல்வமணியிடம் கேட்ட போது, எனது மகன் பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேகம் உள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களிடம் கலந்தாலோசித்து வருகிறோம். பிரேத பரிசோதனையில் என்னென்ன குறைகள் இருக்கிறது என்பது பின்னர் தான் தெரிய வரும் என்றார். #sarathprabhu #TamilNews