திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் அலெக்சாண்டர். இவர் கடந்த 26-ந் தேதி இரவு திருப்பூர்- ஊத்துக்குளி சாலை மண்ணரை சோதனை சாவடியில் பணியில் இருந்தார்.
அப்போது உதவி கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி இரவு ரோந்து குறித்து வாக்கி- டாக்கியில் பேசி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் போலீஸ்காரர் அலெக்சாண்டர் குறுக்கிட்டு குடிபோதையில் உளறியதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் சோதனை சாவடி சென்று விசாரித்தார். அப்போது அலெக்சாண்டர் மது போதையில் பணியில் இருந்தது தெரிய வந்தது.
அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை அலெக்சாண்டர் ஒருமையில் பேசி தாக்க முயன்றதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதற்காக உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் அலெக்சாண்டரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.