செய்திகள்

திருப்பூரில் போலீஸ் என மிரட்டி பனியன் தொழிலாளியிடம் பணம் பறிப்பு: 3 பேர் கைது

திருப்பூரில் போலீஸ் என கூறி பனியன் தொழிலாளியிடம் பணம், செல்போனை பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சிக்கண்ணகுப்பத்தை சேர்ந்தவர் சதிஷ் கிருஷ்ணா (28). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

ஊருக்கு சென்று இருந்த இவர் அதிகாலை 3.30 மணியளவில் ரெயிலில் திருப்பூர் வந்தார். ரெயில் நிலையத்தில் இருந்து பனியன் கம்பெனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை கடந்து சதிஷ் கிருஷ்ணா சென்றார். உடனே 3 பேரும் அவரை அழைத்தனர். அவரிடம் நாங்கள் 3 பேரும் போலீஸ்காரர்கள். நீ எங்கிருந்து வருகிறாய்? பையில் என்ன உள்ளது. சோதனை நடத்த வேண்டும் என கூறி உள்ளனர்.

அவர்கள் 3 பேரும் போலீஸ் சீருடையில் இல்லாததால் சந்தேகம் அடைந்த சதிஷ் கிருஷ்ணா அவர்களிடமிருந்து தப்பி செல்ல முயன்றார்.

உடனே 3 பேரும் சதிஷ் கிருஷ்ணாவை கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றனர்.

உடனே சதிஷ்கிருஷ்ணா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் வந்தனர். அவர்கள் தப்பி ஓடிய 3 பேரையும் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த முகம்மது யூனிஸ் (34), விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த மாயாண்டி (36), சிவகாசியை சேர்ந்த ரவிகுமார் (32) என்பது தெரிய வந்தது.

அவர்களை கைது செய்தனர். இவர்கள் வேறு யாரிடமும் பணம் பறித்து உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.