திருப்பூர்:
திருப்பூர் பெரிச்சி பாளையம் வினோபா நகரை சேர்ந்தவர் பெருமாள். பனியன் தொழிலாளி. இவரது மகள் கீர்த்தனா (வயது 17). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு முழு ஆண்டு தேர்வுக்காக கீர்த்தனா தயாரானபோது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மாணவியின் பெற்றோர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் காய்ச்சலின் தீவிரம் குறைந்தபாடில்லை. காய்ச்சல் குணமாகாததால் கீர்த்தனாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கீர்த்தனா பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் சமீப காலமாக மர்ம காய்ச்சலுக்கு தொடர்ந்து இறந்து வருகிறார்கள். இது குறித்து சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மர்மக்காய்ச்சல் பலி தொடருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.