செய்திகள்

திருப்பூரில் வெவ்வேறு விபத்தில் இளம்பெண் - வாலிபர் பலி

திருப்பூரில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண்-வாலிபர் பலியானார்கள்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் காலேஜ் ரோடு தொங்கனகிரி முதல் வீதியை சேர்ந்தவர் சதிஷ். இவரது மனைவி விஜயா (27). இவர்கள் 2 பேரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று மாலை விஜயா வேலை முடிந்து தனது கம்பெனியில் வேலை பார்த்து வரும் ரமேஷ் குமார் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

பூண்டி பகுதியில் வந்த போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க ரமேஷ் குமார் பிரேக் பிடித்தார். இதனால் நிலை தடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

விஜயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் வீரபாண்டி இடுவாய் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ராஜ் கமல் (19). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மேஸ்திரியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

இடுவாய் - திருப்பூர் சாலையில் வஞ்சிப்பாளையம் பிரிவில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூரில் இருந்து இடுவாம்பாளையம் சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்கமல் சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.