செய்திகள்

திருப்பூரில் 25 அடி உயரத்தில் பழுதுபார்த்தபோது தவறி விழுந்து வெல்டிங் தொழிலாளி பலி

திருப்பூரில் 25 அடி உயரத்தில் பழுதுபார்த்தபோது தவறி விழுந்து வெல்டிங் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கார்த்திக் (வயது 20). திருமணமாகவில்லை. இவர் திருப்பூர் பழவஞ்சிபாளையத்தில் தங்கி அங்குள்ள கம்பெனியில் வெல்டிங் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் கருப்பக் கவுண்டன் புதூரில் உள்ள பொதுசுத்திகரிப்பு நிலையத்தின் மேற்கூரை பழுதானது. சிமெண்ட் சீட்டால் பொருத்தப்பட்டிருந்த அதனை சரி செய்ய கார்த்திக் நேற்று சென்றார். 25 அடி உயரத்தில் வெல்டிங் செய்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலே யே கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT