செய்திகள்

திருப்பூரில் தந்தையின் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய வாலிபர்

தந்தையுடனான கள்ளக்காதலை நிறுத்துமாறு கண்டித்தும் கண்டுக்கொள்ளதால் நடுரோட்டில் விரட்டி சென்று பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (45). இவர் அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் திருப்பூர் பஸ் நிலையம் குமரன் சிலை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தார்.

அப்போது அங்கு ஒரு வாலிபர் வந்தார். அவர் திடீரென ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரங்கநாயகியை குத்த முயன்றார்.

இதனால் பயந்து போன ரங்கநாயகி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்தி சென்ற வாலிபர் கத்தியால் மீண்டும் குத்த முயன்றார். அதனை தடுக்க ரங்கநாயகி முயன்றார்.

ஆனாலும் வாலிபர் ரங்கநாயகி கையில் குத்திவிட்டார். வலியால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்ததும் அங்கு பஸ்சுக்காக காத்து இருந்த பயணிகளும், பொதுமக்களும் ஓடி வந்தனர். அவர்கள் கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்த கத்தியை பறித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த ரங்கநாயகியை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி பின்புறம் உள்ள ஸ்ரீவித்யா நகரை பகுதியை சேர்ந்த அருண் (30) என்பது தெரிய வந்தது.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அருணை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கூறியதாவது-

எனது தந்தை துரை கடந்த சில மாதங்களுக்கு முன் எனது தாய் ரத்தினத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் எனது தந்தைக்கும், ரங்கநாயகிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதனை நான் கண்டித்தேன். ஆனாலும் எனது தந்தை ரங்கநாயகியுடன் உள்ள கள்ளத்தொடர்பை நிறுத்தவில்லை. இது தொடர்பாக ரங்கநாயகியையும் கண்டித்தேன். அவரும் இதனை கண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் ரங்கநாயகி நிற்கும் தகவல் கிடைத்ததும் அங்கு வந்தேன். அவரை கத்தியால் குத்தினேன். அவர் பயத்தில் எனது கையை பிடித்ததால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பஸ் நிறுத்தத்தில் அருண், ரங்கநாயகியை கத்தியால் குத்தும் காட்சியை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதனை வாட்ஸ் அப்பில் பரப்பி வருகிறார்கள். மேலும் இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவிலும் பதிவாகி உள்ளது. இந்த காட்சியையும் பரப்பி வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.