திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்புத்துறை வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளன. இது தொடர்பாக எழுத்து தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.
திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியிலும், ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சின்னக்கரை பார்க் கல்லூரியிலும், அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக் பள்ளியிலும், அருள்புரம் ஜெயந்தி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிலகம் மற்றும் ஜெயந்தி சி.பி.எஸ்.சி. பள்ளி ஆகிய 6 மையங்களிலும் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் நபர்கள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்துக்குள் வரவேண்டும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய அழைப்பு ஆணை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து தேர்வில் கலந்து கொள்பவர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையை பதிவிறக்கம் செய்து கொண்டு வரவேண்டும். இந்த அழைப்பாணையில் புகைப்படம் இல்லாவிட்டால் அதில் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தேர்வு மையத்திற்கு எடுத்து வரவேண்டும்.
அழைப்பாணை இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். எழுத்து தேர்வுக்கு வருபவர்கள் பரீட்சை அட்டை கொண்டு வர வேண்டும். நீலம் அல்லது கருப்பு பால் பாயிண்ட் பேனா உபயோகித்தல் வேண்டும். எழுத்து தேர்விற்கு பென்சில் மற்றும் இதர எழுதுகோல்களை உபயோகித்தல் கூடாது. தேர்வு மையத்தினுள் செல்போன், கால்குலேட்டர், ப்ளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.