நீதிமன்றம் 
செய்திகள்

வாலிபரை கத்தியால் குத்திய காவலாளிக்கு 5 ஆண்டு சிறை- திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு

திருப்பூரில் நடுரோட்டில் வாலிபரை கத்தியால் குத்திய காவலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

மாலை மலர்

திருப்பூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பரமக்காலனி அண்ணா நகரை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 38). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் ஒரு வணிக வளாகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 26-6-2014 அன்று திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு சென்றார்.

அங்கு திருப்பூர் குமரானந்தபுரத்தை ஜெகதீஷ்கண்ணன்(27) என்பவர் தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல்படையில் சேர்ந்து மாநகரின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது கதிரேசனுக்கும், ஜெகதீஷ்கண்ணனுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கதிரேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகதீஷ்கண்ணனின் முகம் மற்றும் முதுகுபகுதியில் குத்தியதுடன் நடுரோட்டில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் விரைந்து வந்து கதிரேசனை கைது செய்தனர். மேலும் காயமடைந்த ஜெகதீஷ்கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து பின் குணமடைந்தார்.

இதுகுறித்து தெற்கு போலீசார் கதிரேசன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அணுராதா, கதிரேசனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் ஜோதி ரங்கசாமி ஆஜராகி வாதாடினார்.