கைது 
செய்திகள்

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த 2 பேர் கைது

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர், பி.என் ரோடு பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் சொகுசு காரில் வந்த இரண்டு பேர் தங்களை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் எனக்கூறி மோசமான நிலையில் இருக்கும் பின்னலாடை நிறுவனங்களில் ஆய்வு செய்வதாகவும் ஆய்வு செய்தால் கடும் நடவடிக்கை இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஒரு மாநாடு நடத்த இருப்பதாகவும் அதற்கு நன்கொடை வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த பின்னலாடை நிறுவன அலுவலர்கள் சிலர் அவர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பியதும் எங்களையே சந்தேகப்படுகிறீர்களா? என மிரட்டியுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அடையாள அட்டையை காட்டியுள்ளனர். பின்னர் இருவரும் தாங்கள் வந்த சொகுசு காரில் தப்பி சென்றனர்.

அவர்களை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் துரத்திபிடித்து அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதில் சந்தேகம் அடைந்த வாலிபர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் போலியான அதிகாரிகள் என தெரிய வந்தது. போலியான அடையாள அட்டைகளோடு திருப்பூரில் பல பின்னலாடை நிறுவனங்களில் மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.

அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குமார் (39), ராமநாதபுரம் மாவட்டத்தை முருகன் (64) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.84 ஆயிரம் பணம் மற்றும் சொகுசு கார், போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.