வங்கி கணக்குகள் முடக்கம் 
செய்திகள்

திருப்பூரில் 2,300 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடி தொடர்பாக 2,300 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

மாலை மலர்

திருப்பூர்:

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பிரதமரின் கிசான் திட்டத்தில் மோசடிகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்களை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்திலும் யாராவது மோசடி செய்துள்ளனரா என்பது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் இதுகுறித்து விசாரிப்பதற்காக வேளாண்மை துறை அதிகாரிகள் அடங்கிய தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் மாவட்டம் முழுவதும் நேரடியாக ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் விவசாயிகள் கிசான் திட்டத்தில் சேர்ந்திருப்பதும், இவர்களில் 1000 பேர் தகுதியற்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் பணியில் இருப்பவர்கள், ஒரே குடும்பத்தில் 3 அல்லது 4 பேர் விண்ணப்பித்திருந்தது, வருமான வரி செலுத்துபவர்கள் என தகுதியில்லாத 1000 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வங்கி கணக்குகள் அனைத்தும், முடக்கப்பட்டு, வங்கி கணக்கில் இருந்த ரூ.40 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

மேலும் வெளி மாவட்டத்தில் நிலம் வைத்திருக்கும் 1,300 விவசாயிகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வங்கி கணக்கில் இருந்து பணம் பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். அந்த வங்கி கணக்கில் தற்போது பணம் இல்லை. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களை தொடர்பு கொண்டு நிதி உதவி திட்டத்தில் பெறப்பட்ட தொகையை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.