திருப்பூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 32). டிரைவர். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் நாச்சிப்பாளையத்தில் குடியிருந்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் அன்று இரவு திருப்பூர் மங்கலம் ரோடு லிட்டில் பிளவர் நகரில் பேச்சிமுத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய உடலுக்கு அருகே பட்டாக்கத்தி கிடந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் மத்திய போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் பேச்சிமுத்து கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த வள்ளிநாயகம்(30) என்பவர் சரண் அடைந்துள்ளார். அவரை போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரிக்க திருப்பூர் மத்திய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சின்னாண்டிப்பாளையத்தில் வசித்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த வெள்ளைப்பாண்டி(31), அவருடைய உறவினரான திருநெல்வேலியை சேர்ந்த சுடலைமணி(29) ஆகியோரை திருப்பூர் மத்திய போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.