திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை காலை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுக்கு 4 முறை சுத்தம் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடபிறப்பு நாளான யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய 4 உற்சவங்களுக்கு முன்னர் வரும் செவ்வாய்க்கிழமை கோவில் வளாகம் வெளிவாசல் முதல் கருவறை வரை சுத்தம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி செப்டம்பர் 23-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதை முன்னிட்டு நாளை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக ஏழுமலையான் தரிசனம் காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
இதனை முன்னிட்டு அன்று காலை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டு புரோட்டோகாலுக்கு மட்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.