திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானை வழிபடும் பக்தர்களின் குறைகள் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று தொலைபேசி மூலம் கேட்டு பதில் அளிக்கும் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருமலை அன்னமய பவனத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு குறைகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
அவர்களுக்கு தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் பதில் அளித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குட்பட்ட மங்காபுரம் சீனிவாசா கோவிலில் வருகிற 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், திருப்பதி கபிலேஸ்வரசுவாமி கோவிலில் பிப்ரவரி 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரையும் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. மேலும் கபிலேஸ்வரசுவாமி கோவிலில் 13-ந் தேதி மகாசிவராத்திரி விழாவும் நடக்கிறது.
ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமியன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில் அவர்கள் தரிசனத்துக்கும், விழாவிற்கும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தேவஸ்தான அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்ரீவாரி சேவா தொண்டர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். பக்தர்களுக்கு குடிநீர் வசதி, அன்னபிரசாதங்கள், மோர் போன்றவை அப்போது குறைவின்றி வழங்கப்பட்டன.
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள் ஆகியோருக்கு தரிசனம் செய்ய முன்னுரிமை அளித்து டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி பிப்ரவரி மாதம் 13 மற்றும் 20-ந் தேதிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கும், 12 மற்றும் 21-ந் தேதிகளில் கைக்குழந்தையுடன் வந்த பெண்களுக்கும் 4 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பதி கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் கரன்சி நாணயங்கள், நோட்டுகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு மலேசியா பக்தர்கள் செலுத்திய 18 டன் கரன்சிகள் உள்பட 45 டன் வெளிநாட்டு நாணயங்கள் வங்கிகளில் 15 நாட்களில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக திருப்பதி மற்றும் ஓய்விடங்களில் 2 ஆயிரத்து 600 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.