சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது 
செய்திகள்

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

திருப்பதி திருக்குடை ஊர்வலம், இன்று (சனிக்கிழமை) காலை சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது

விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கிவைத்தனர். இந்த ஊர்வலத்தை, முதல் 3 நாட்களில், 15 லட்சம் பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

திருப்பதி திருக்குடைகளை தரிசித்தால் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடிகள் விலகும், வியாபாரம் அபிவிருத்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோவிலை சென்றடைகிறது.

பின்னர் அங்கிருந்து அக்டோபர் 2-ந் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. 3-ந் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT