திருமலை:
திருப்பதி சேஷாசல வனப்பகுதி கோடைக் காலத்தில் வறண்டு காய்ந்து போகும். பலத்த காற்றினால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் அவை தீ பிடித்து வனப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகின்றன.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து 3 நாட்கள் எரிந்தது.
இதை அணைக்க ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது திருமலை நீர்தேக்கத்தில் கோடைக் கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த நீர் பயன்படுத்தப்பட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதற்கு பிறகு தேவஸ்தானம் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதியில் ‘பயர் அலாரம்’ ஏற்படுத்துதல், தண்ணீர் டேங்கர்களை வனப்பகுதி அருகில் நிறுத்தி வைத்தல், கண்காணிப்புப் பணியில் தேவஸ்தான வன ஊழியர்கள் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே 4 முறை காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை திருப்பதியில் உள்ள தேவஸ்தான போக்கு வரத்துத் துறை பணிமனை அருகில் உள்ள வனப்பகுதியில் திடீரென்று காட்டுத் தீ ஏற்பட்டு பரவத் தொடங்கியது.
தகவலறிந்த தேவஸ்தான தீயணைப்புத் துறையினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுத் தீயை அணைக்க முயன்றனர்.ஆனால் கட்டுக்கடங்காமல் தீ வேகமாக பரவியது. சுமார் 2 மணிநேரம் போராடி ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சில ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது. மூலிகை செடிகளும் ஏராளமான மரங்களும் கருகியது.
இதுபோன்று அடிக்கடி தீ விபத்து ஏற்படும் நிலையில், காட்டு தீ விபத்துகளை தடுக்க இதுவரை தேவஸ்தானம் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காட்டுத் தீ பரவாமல் தடுக்க தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tirupatitemple #tamilnews