செய்திகள்

திருப்பதியில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்: 27-ந்தேதி கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. 27-ந்தேதி கருட சேவை நடக்க உள்ளது.

மாலை மலர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (சனிக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது. நாளை மாலை 5.48 மணியில் இருந்து 6 மணிவரை மீன லக்னத்தில் கொடியேற்றமும்(துவாஜாரோகணம்), அதைத்தொடர்ந்து இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

24-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சின்ன சே‌ஷ வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை அம்ச வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

பிரம்மோற்சவ விழாவின் ‘சிகர’ நிகழ்ச்சியாக 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருடவாகன (கருடசேவை) வீதிஉலா நடக்கிறது.

28-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை தங்கத்தேரோட்டம், இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை யானை வாகன வீதிஉலா.

29-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை 7 மணியளவில் தேரோட்டம், இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். எனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின்போது வாகன சேவையை காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.