கொரோனா ஊரடங்கால் தரிசனம் நிறுத்தப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தளர்வுக்கு பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்வதிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக பிரம்மோற்சவம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் நடந்து முடிந்தபின் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் என்று கூறப்படும் தீர்த்தவாரி நடைபெறும்.
அப்போது தெப்பக் குளத்தில் 4 பக்கங்களிலும் கூடியிருக்கும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வார் புனித நீராடுவர். தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொது இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனந்த பத்மநாபசுவாமி விரதத்தின் நிறைவு நிகழ்ச்சியான சக்கர ஸ்நானம் திருப்பதியில் நடந்தது. தெப்பக்குளத்துக்கு செல்லாமல் கோவிலுக்கு உள்ளேயே வழக்கத்துக்கு மாறான முறையில் சக்கர ஸ்நானம் நடத்தப்பட்டது.
இதற்காக அகன்ற அண்டா ஒன்றில் தெப்பக்குளத்தில் இருந்து புனித நீரை அர்ச்சகர்கள் கோவிலுக்குள் கொண்டு வந்தனர். ரங்கநாயகர் மண்டபத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது.
அப்போது அகன்ற அண்டாவில் வைக்கப்பட்டிருந்த தெப்பக்குளத்தின் புனித நீரில் 3 முறை சக்கரத்தாழ்வாரை மூழ்கச் செய்து சக்கர ஸ்நானம் செய்தனர்.