திருமலை:
திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாசராஜூ கூறியதாவது:-
ஏழுமலையானை இலவச தரிசனம் (சர்வ தரிசனம்) மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் முக்கிய நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
பக்தர்கள் காத்திக்கும் நேரத்தை குறைக்க வருகிற 18-ந்தேதி முதல் டைம் ஸ்லாட் முறை சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி சர்வ தரிசன முறையில் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்களுக்கு 18-ந்தேதி முதல் டோக்கன் முறை அமல்படுத்தப்படும். இதற்காக திருமலையில் 14 இடங்களில் 117 டோக்கன் விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதில் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவர்கள் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் சர்வ தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவர்.
7 நாட்கள் வரை இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இது நிரந்தரமாக்கவோ அல்லது நிறுத்துவதா என முடிவு செய்யப்படும்.
ஏழுமலையான் கோவிலில் நைவேத்தியத்துக்கான பிரசாதம் மற்றும் அன்னபிரசாதங்கள் வகுளமாதா கட்டிடத்தில் நடந்து வருகிறது.
இங்கு மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் முடிந்ததும் கூடுதலாக 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை லட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.