நெல்லை:
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகியவை நடந்து வருகிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகள் அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகளும் நடைபெறவில்லை.
தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்களின் போராட்டம் 17-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. டாக்டர்கள், மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால் அறுவை சிகிச்சை இன்று 3-வது நாளாக நிறுத்தப்பட்டன. அவசர அறுவை சிகிச்சை தவிர ஏனைய அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டன.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் 3-வது நாளாக நிறுத்தப்பட்டதால் உள் நோயாளிகள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு அளிக்க கூடிய சிகிச்சைகள் தள்ளிப்போகின்ற நிலை உருவாகி உள்ளது.
நெல்லையில் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இன்று உண்ணாவிரத பந்தலில் 7 பேர் பிணம் போல் படுத்திருந்தனர். அவர்களை சுற்றி பெண் டாக்டர்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் அனைவரும் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆஸ்பத்திரி வளாகத்தில் பேரணியாக சென்றனர்.
ஆபரேசனை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுட்டதால் இன்றும் 100-க்கும் மேற்பட்ட ஆபரேசன்கள் நடைபெறவில்லை. மிகவும் அவசரமான ஆபரேசன் மட்டுமே நடந்தது. உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் போதிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சந்தித்து தங்களின் போராட்டம் குறித்து எடுத்து கூறினர். அப்போது டாக்டர்கள் நோயாளிகளிடம் உங்களுக்காகதான் இந்த போராட்டம் நடக்கிறது. சிரமத்தை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினர்.